|

பிரமிட் சாய்மீரா புரடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் லிட். நிறுவனத்துக்காக தெய்வானை மூவிஸ்
சார்பில் அமுதா துரைராஜ், கே.சி.என். சந்திரசேகர் தயாரிக்கும் புதிய படம் வானம்
பாத்த சீமையிலே. இப்படத்தின் கதை, திரைக் கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜேப்பி
அழகர். விஜயகாந்தை வைத்து சுதேசி படத்தை இயக்கியவர் இவர். ஜேப்பி அழகர் இயக்கும்
இரண்டாவது படம் இது.
பிடிச்சிருக்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அசோக்குமார், இப்படத்தில்
வித்தியாசமான கெட்டப்பில் கதாநாயகனாக நடிக்கிறார். வெயில் படத்தில் நடித்த
பிரியங்கா கதாநாயகியாக நடிக்கிறார்.
வீம்பும், வீராப்பும் கொண்ட விடைப்பான இளைஞனாக அசோக்குமார் நடிக்க, ஆடு மேய்க்கும்
பெண் வேடத்தில், கிராமத்து பெண்களுக்கே உரிய வீரமிக்க பெண்ணாக பிரியங்கா
நடிக்கிறார். ஒருவருக்கொருவர் சளைக்காமல் படம் முழுக்க இருவரும் நடிப்பில்
போட்டிபோட்டிருக்கிறார்கள்.
மற்றும் சரண்யா, கஞ்சாகருப்பு, விஜயகுமார், செவ்வாழை, குருஜி, கதிர் (திருடி பட
நாயகன்) ஆகியோரும் நடிக்கிறார்கள்.
சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை போன்ற வட்டார வழக்கில்தான் இதுவரை திரைப்படங்கள்
தயாரிக்கப்பட்டிருக்கின்றன. முதன்முறையாக இராம நாதபுரம் மாவட்ட வட்டார வழக்கில்
இப்படம் உருவாகி இருக்கிறது.
இராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வியலைச் சொல்லும் வானம் பாத்த சீமை யிலே
திரைப்படம் அம்மக்களின் வாழ்க்கையை மிக நேர்த்தியாக சொல்லும் இப் படத்தின்
படப்பிடிப்பு காரைக்குடியைச் சுற்றியுள்ள கருகுடி, இளங்குடி, சிறாவயல் போன்ற
கிராமங்களில் நடைபெற்றிருக்கிறது. இதுவரை காரைக்குடியில் எடுக்கப் பட்ட அனைத்து
திரைப்படங்களும் அங்குள்ள செட்டிநாட்டு அரண்மனை வீடு களில்தான்
படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்தப்படத்திலோ காரைக்குடியைச் சுற்றி யுள்ள வறட்சியான
பொட்டல்வெளிகளில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப் பட்டிருக்கிறது. வானம் பாத்த
சீமையிலே படத்தில் இடம்பெறும் ஐந்து பாடல்கள் மற்றும், மூன்று சிறு பாடல்களும் கூட
இதே பகுதியில்தான் படமாக்கப் பட்டிருக்கின்றன.
வானம் பாத்த சீமையிலே என்ற இந்த தலைப்பே இப்படத்தில் யதார்த்தமும், வாழ்வியலும்
இருப்பதை உணர்த்துகிறது.

சினிமாவுக்காக கதை பண்ணுவதில் ஒரு ஃபார்முலா கையாளப்படுகிறது. அதற்குள் அடங்காத ஒரு
சம்பவத்தை எடுத்துக் கொண்டு அதை அந்த பார்முலாவுக்குள் திரைக்கதை அமைத்திருப்பது
இந்தப்படத்தில் புதுமையான விஷயம் என்கிறார் இயக்குநர் ஜேப்பி அழகர்.
இந்தப்படத்தில் கதாநாயகன், கதாநாயகி போல் ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது கருப்பணசாமி
கோயில். இந்தக்கோயில் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று காரைக்குடி சுற்று
வட்டாரங்களில் தேடி, தான் நினைத்ததுபோல் அமையாததால் இயக்குநர் ஜேப்பி அழகர்,
காரைக்குடி அருகே புதுவயலில் உள்ள ஏ.கருப்பையா என்ற சிற்பியை கலந்து ஆலோசித்து
ஐந்தரை அடி உயரத்தில் உண்மையான கருப்பணசாமி சிலையை ஐதீக முறைப்படி உருவாக்கினார்.
கிராம மக்களின் ஒத்துழைப்புடன் அந்த சிலை புதிய கருப்பணசாமி கோயிலாக நிர்மாணிக்கப்
பட்டது. சிராவயல் பொட்டலில் உச்சிவெயில் நேரத்தில் கருப்பணசாமி சிலையைப் பார்க்க
கம்பீரமாகவும், பயமுறுத்துவதாகவும் இருந்தது.
வீடு படத்துக்காக ஒரு வீட்டையே உண்மையாகக் கட்டினார் இயக்குநர் பாலு மகேந்திரா.
காதலன் படத்துக்காக ஒரு கண்ணாடி பஸ்ஸையே உருவாக்கினார் இயக்குநர் ஷங்கர். வானம்
பாத்த சீமையிலே படத்துக்காக ஒரு கோயிலையே உருவாக்கியதன் மூலம் இயக்குநர் ஜேப்பி
அழகர், தனது சினிமாவில் யதார்த்தம் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை
சாத்தியமாக்கி இருக்கிறார்.
அதேபோல் இந்தப்படத்தில் வரும் ஒரு திருவிழா பாடலுக்கு 500க்கும் மேற்பட்ட
முளைப்பாரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இளங்குடி என்ற கிராமத்தில் வளர்க்கப் பட்ட
இந்த முளைப்பாரி, முளைவிட்டு வளர்ந்து முடியும் வரை ஏழு தினங்களும் அந்த வீட்டு
மக்கள் விரதமிருந்து பயபக்தியுடன் வளர்த்தனர்.
கதாநாயகன் அசோக்குமார் உண்மையிலேயே தீவிர கடவுள் பக்தி உள்ளவர். படத்தில்
முருகனுக்கு விரதமிருந்து காவடி எடுப்பதுபோன்ற காட்சியில் நடிக்கும் போது
உண்மையிலேயே சாமி அருள் வந்து மயங்கிவிட்டார்.

இதை சினிமாவாக எண்ணாமல் தான் வாழ்ந்த மண்ணின், மக்களின் வாழ்க்கை என்பதால்
படப்பிடிப்பு நடந்தபோது இயக்குநர் ஜேப்பி அழகர் உணர்ச்சிமயமா கவே காணப்பட்டார்.
ஒளிப்பதிவு: செந்தில் பரமேஷ்.கே.,இசை: ஸ்ரீகாந்த்தேவா,பாடல்கள்: பழனிபாரதி,
நந்தலாலா, ஜேப்பி அழகர், படத்தொகுப்பு: வி.டி.விஜயன், சண்டைப்பயிற்சி: சூப்பர்
சுப்பராயன், கலை: மோகன், தயாரிப்பு நிர்வாகம்: பி.வி.குமார்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்:
ஜேப்பி அழகர்
தயாரிப்பு:
பிரமிட் சாய்மீரா புரடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் லிட்.
|