|

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய பிறகு, கதைகளைக் கேட்கத் துவங்குவதே இதுவரை சினிமாவில்
இருந்து வரும் வழக்கம். மாறாக, கதையில் மிகவும் ஈர்க்கப்பட்டு அதற்காகவே
தயாரிப்பில் கால் பதித்த நிறுவனம் ஸ்ரீகிருஷ்ணா பிக்சர்ஸ்.
சிறு வயது முதலே சினிமா மீது தணியாத தாகம், இரண்டு படங்களின் குறிப்பிட்ட ஏரியாவின்
விநியோகஸ்தர் என்பதைத் தாண்டி இப்படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் ஆர்.சிவகோகுல்ராஜன்
அவர்கள் சினிமாவில் பெரிய அளவில் பங்கெடுத்துக் கொண்டதில்லை ஆனாலும் அதனையெல்லாம்
யோசிக்காமல் கதையின் - கதாபாத்திரங்களின் - கதைக்களத்தின் மீதான ஈடுபாட்டால்
துணிந்து தயாரிப்பில் குதித்தார். முதலில் படத்தில் வரும் முக்கியப்
கதாபாத்திரமொன்றில் நடித்துத் தருமாறு மட்டுமே இயக்குநர் தரப்பில் இவரை அணுகினர்.
ஆனால், தன் கதாபாத்திரத்தோடு ஒட்டுமொத்த படத்தின் யதார்த்தத்திலும், புதுமையிலும்
மனம் லயித்துப் போனவர், இன்று தமிழ் சினிமாவில் யதார்த்தப் படங்களுக்கான ஆரோக்யமான
சூழலைக் கருத்தில் கொண்டு தானே முன் வந்து இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.
அத்துடன் அந்த முக்கியமான பாத்திரத்திலும் ரசித்து வாழ்ந்திருக்கிறார்.
இயக்குநர் சுந்தரன், இயக்குநர் அகத்தியன் உட்பட பல்வேறு இயக்குநர்களிடமும் 10
ஆண்டுகளாகப் பணிபுரிந்தவர். கடைசியாக தனம் படத்தில் இணை இயக்குநராக முக்கியப் பங்கு
வகித்தார். கதை நடக்கும் களத்திற்கே சென்று அங்கேயே தங்கி தன் கதையை மெருகேற்றி
திரைக்கதை, வசனம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் இவர் நிறைவு செய்தது இவரின் முதல்
புதுமை. சினிமா என்பது சென்னையை மட்டுமே தலைநகராகக் கொண்டு தீர்மானிக்கப்பட
வேண்டிய, விஷயமன்று! என்பது இவரின் அழுத்தமான எண்ணம்.
கதையை மட்டுமே இவர் கதை சார்ந்த தளத்தில் செதுக்கிக் கொள்ளவில்லை. கதாநாயகனையும்
கதை நடக்கும் பகுதியிலிருந்தே தேர்வு செய்து கொண்டார். ரவி என்கிற விவசாயம்
செய்துவந்த இளைஞன்தான் இப்படத்தின் கதைநாயகன். இது இயக்குநரின் இரண்டாவது புதுமை.
மூணார் ரமேஷ், பசங்க செந்தில்குமாரி, சில படங்களில் சிறுசிறு வேடங்களில் மட்டுமே
நடித்த இதன் கதாநாயகி அஸ்வதா... இவர்களைத் தவிர்த்து படத்திற்கான அத்தனை
நடிகர்களையும் படப்பிடிப்பு நடத்தப்பட்ட திட்டக்குடி சுற்றுப்புறங்களில் இருந்து
தேர்வு செய்து பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். மாபெரும் வெற்றிபெற்ற
பருத்திவீரன், சுப்ரமணியபுரம், நாடோடிகள், வெண்ணிலா கபடிகுழு போன்ற யதார்த்தப்
படங்களைக் காட்டிலும் முற்றிலும் புதுமுகங்களை - மண்ணின் மனிதர்களைக் கொண்ட
யதார்த்தப் படமாக உருவாகியிருக்கிறது - திட்டக்குடி 7 கி.மீ.
படப்பிடிப்பு முழுவதையும் 55 நாட்களில், கீழப்பெரம்பலூர், பெருமத்தூர் குடிகாடு,
வேள்விமங்களம் என்ற மூன்றே ஊர்களில் சுற்றிச் சுற்றி முடித்திருக்கிறார் இயக்குநர்
சுந்தரன். பாடல் காட்சிகளையும் கூட யதார்த்தத்தை மீறிவிடாமல் கதை சார்ந்த இந்த
ஊர்களிலேயே படம் பிடித்திருக்கிறார்.

இது நிச்சயம் சொல்லப்படாத ஒரு கதைதான். அதில் அணு அளவுக்கும் எவருக்கும் சந்தேகம்
வந்துவிடக் கூடாது என்பதாலோ என்னவோ, இயக்குநர் தேர்வு செய்திருப்பது ஒரு சித்தாளின்
வாழ்க்கையை! பொதுவாக, விவசாயம் பொய்க்கும் சூழ்நிலைகளில் விவசாயிகளேதான்
சித்தாள்களாக கரணையை (கொலுத்து - கொலுது) கையில் எடுக்கிறார்கள். விவசாயிகள் எப்படி
எல்லா சாதிகளிலும் இருக்கிறார்களோ, அப்படியே விவசாயிகளான சித்தாள்களும் எல்லா
இனங்களிலும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட துடுக்கும், இளமைத் திமிரும் கொண்ட ஒரு
சித்தாளின் போக்கை - அவனது பரப்பில் பிரியம் யதார்த்தம் மாறாத மக்களின் வாழ்க்கையை
சுவாரஸ்யமான போக்கில் பதிவு செய்திருக்கிறது திட்டக்குடி 7 கி.மீ.
யதார்த்தம் நிறைந்த மண்மணம் கொண்ட படங்கள் என்றாலே, மதுரை உள்ளிட்ட தென்தமிழகம்
சார்ந்த படங்களே பெரும்பாலும் நம் நினைவுக்கு வரும். அந்தக் குறையை வட தமிழகம்
சார்ந்த பண்ருட்டி மக்களின் வாழ்க்கையைப் பேசிய தங்கர்பச்சானின் அழகி, சொல்ல மறந்த
கதை படங்கள் ஓரளவுக்கு ஈடுசெய்தன. திட்டக்குடி 7 கி.மீ. கடலூர் மாவட்டத்துக்கும்,
அரியலூர் மாவட்டத்துக்கும் இடைப்பட்ட எல்லையில் அமைந்துள்ள திட்டக்குடி பகுதி
மக்களின் வாழ்க்கை முறையை, அவர்களின் பேச்சு நடையை, வாழ்நிலங்களை உங்கள் பார்வைக்கு
வைக்கும். இது மிக வித்தியாசமானப் படம் என்று படக்குழுவினர் சொல்ல வேண்டிய அவசியமே
இல்லாத அளவுக்கு, திட்டக்குடி மக்கள் மிக வித்தியாசமான ஒரு புத்துணர்வை ஏற்படுத்தி
உங்கள் மனங்களில் பதிவார்கள். அதற்கு திட்டக்குடி 7 கி.மீ. படக்குழுவினர் உறுதி
தருகிறார்கள். இந்தப் படத்திற்கு பிறகு தமிழகத்தின் பலதரப்பட்ட பகுதி மக்களின்
வாழ்க்கையைப் பதிவு செய்யும் பட முயற்சிகள் மேலும் அதிகரிக்கலாம்.
கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி மக்களின் வாழ்க்கையைப் பேசும் திட்டக்குடி 7 கி.மீ.
படத்திற்கு அம்மாவட்ட மக்களின் வாழ்க்கை முறையை நன்கு அறிந்த ஒளிப்பதிவாளரும் -
இசையமைப்பாளரும் கிடைத்ததும் மிகவும் இயல்பான ஒன்றுதான். இப்படத்தின் ஒளிப்பதிவாளர்
கருப்பையாவுக்கு இது முதல் படம். இவர் ஒளி ஓவியர் தங்கர்பச்சானிடம் அழகி, சொல்ல
மறந்த கதை உள்ளிட்ட பல படங்களில் உதவியாளராகப் பணிபுரிந்துள்ளார். இசையமைப்பாளர்
செல்வநம்பி மிகச் சிறு வயதிலிருந்தே இசையில் லயித்து வாழ்ந்து வரும் திறமையான
இளைஞர். இசைஞானியின் இசையில் ஏற்படும் ஆழ்மன ஈடுபாடு இப்படத்தின் ஒவ்வொரு பாடலிலும்
ஏற்படுவதை உங்களால் தவிர்க்க இயலாது.
படத்தில் இடம்பெரும் 5 பாடல்களில் ஒன்றை கவிஞர் நா.முத்துகுமார் எழுதியிருக்க,
கவிஞர் ஏகாதாசியும், இயக்குநர் சிந்துநதி பூ செந்தமிழனும் தலா இரண்டு பாடல்களை
எழுதியுள்ளனர்.
படத்தொகுப்பை பி.ஜி.வேல்முருகனும், நடனத்தை எஸ்.எல்.பாலாஜியும், ஷிவாவும், சண்டைப்
பயிற்சியை ஆக்ஷன் பிரகாஷும், கலையை ராஜீவன், முத்துராஜ் அவர்களின் உதவியாளர்
ஆர்.சுதாகரும் கதையின் யதார்த்தம் குறையாமல் மிகச் சிறப்பாகச் செய்திருக்கின்றனர்.

இப்படத்தின் தயாரிப்புக்குழுவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு துறைகளில்
இருந்தவர்கள். சினிமா மீது இவர்களுக்கு இருந்த தணியாத தாகம், இவர்களை ஒரே குடையின்
கீழ் ஒன்றிணைத்தது எனலாம். இப்படத்தின் நிர்வாகத் தியாரிப்பாளர் அ.செல்வம்.
அனுபவஸ்தர்களே ஒரு படத்தைத் துவக்கி வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி முடிப்பதற்கு
பெரும்பாடுபடும் இந்தக் காலக்கட்டத்தில் மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு 55 நாட்களில்
படப்பிடிப்பை முடித்திருக்கிறார் இவர். இவருக்குத் தோளோடு தோள் நின்று அனைத்தையும்
செல்வனே செய்து முடித்தவர் தயாரிப்பு மேலாளரான வி.பாலமுருகன். இணை தயாரிப்பாளரான
திருமாறன் தன்னை ஒரு தயாரிப்பாளராகவே கருதிக் கொள்ளாமல் அனைத்து வேலைகளிலும் தன்னை
ஈடுபடுத்திக் கொண்டு உழைத்தார். இவர்கள் அனைவரின் கூட்டு முயற்சியால் தயாரிப்பாளர்
டாக்டர் ஆர்.சிவகோகுல்ராஜன் தலைமையில் ஒரு வெற்றிப் படத்திற்கான அனைத்து
தகுதிகளுடனும் ரிலீஸுக்குக் காத்திருக்கிறது திட்டக்குடி 7 கி.மீ.
சட்டம் ஒரு இருட்டறை என்ற மிகப் பெரிய வெற்றிப் படத்தின் மூலம் கடலூர்
மாவட்டத்திலிருந்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த நிறுவனம் வடலூரான் கம்பைன்ஸ்.
சுமார் 25 ஆண்டுகள் கழித்து அதே மாவட்டத்தில் இருந்து துணிச்சலோடு
களமிறங்கியிருக்கிறது ஸ்ரீகிருஷ்ணா பிக்சர்ஸ். அடுத்தடுத்தும் தரமானப்
பெழுதுபோக்குப் படங்களைத் தயாரிக்க நாங்கள் காத்திருக்கிறோம் என்கிறனர் இப்பட
நிறுவனத்தினர் உற்சாகமாக!
|