|
பவானி
விஜயசாந்தியின் நடிப்பில் சுமார் பத்தொன்பது வருடங்களுக்கு முன்
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றதோடு, அப்படத்தில்
நடித்த விஜயசாந்திக்கு ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற பெருமையையும் பெற்றுத்தந்த
வைஜெயந்தி ஐ.பி.எஸ். திரைப்படம் பவானி என்ற பெயரில் தற்போது ரீமேக் செய்யப்பட்டு
வருகிறது. ஸ்ரீமூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நண்பனின் காதலி,
தங்கம், தீ ஆகிய படங்களை இயக்கிய ஜி.கிச்சா இயக்குகிறார்.
வைஜெயந்தி ஐ.பி.எஸ். திரைப்படத்தில் விஜயசாந்தி ஏற்ற காவல்துறை அதிகாரி வேடத்தை
பவானி திரைப்படத்தில் ஏற்று நடிப்பவர் சினேகா. இதுவரை மென்மையான குடும்பப்பாங்கான
வேடங்களில் மட்டும் நடித்து வந்த சினேகா முதன்முறையாக இந்தப்படத்தில் அதிரடியான
ஆக்ஷன் வேடம் ஏற்றிருக்கிறார்.
இந்தப்படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் ஜி.கிச்சா, சினேகாவை அணுகியபோது உற்சாகமாக
நடிக்க முன் வந்தவர், ஒரேயொரு கண்டிஷன் போட்டிருக்கிறார். என்ன கண்டிஷன்?
வைஜெயந்தி ஐ.பி.எஸ். படத்தில் நடித்தபோது டூப் போடாமல் விஜயசாந்தி எப்படியெல்லாம்
ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சியில் நடித்தாரோ அதேபோல் நானும் டூப் போடாமல்
ரிஸ்க்கான காட்சிகளில் நடிப்பேன் என்பதே சினேகா போட்ட கண்டிஷன்!
அதற்கு இயக்குநர் ஜி.கிச்சா மகிழ்ச்சியுடன் உடன்பட, உற்சாகமான சினேகா, பவானி
படத்தில் நடிப்பதற்காக கடுமையான உடற்பயிற்சிகள் செய்து தன்னை தயார்படுத்திக் கொள்ள
ஆரம்பித்தாராம்.
சினேகாவின் ஆர்வத்துக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் சண்டைக்காட்சிகள் தவிர்த்து
மற்ற அனைத்து காட்சிகளையும் படமாக்கிய இயக்குநர் ஜி.கிச்சா, அதன் பிறகு இரண்டாம்
கட்டப் படபிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தி, சினேகா பங்கு பெற்ற சண்டைக்காட்சிகளை
மட்டும் படமாக்கினார். இந்த சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டபோது சினேகா ரிஸ்க்
எடுத்து செய்த சாகசங்களைக் கண்டு ஸ்டண்ட் இயக்குநர் தளபதி தினேஷ்
பிரமித்துப்போனதோடு, சினேகாவை மனமார பாராட்டினாராம்.
சரோஜா உட்பட பல படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகராக வளர்ந்திருக்கும்
சம்பத்துக்கு பவானி படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் கிடைத்திருக்கிறதாம்.
அவரது திரைவாழ்க்கையில் பவானி படம்
முக்கியமான படமாகவும் அமையும் என்கிறார்
இயக்குநர்.
இந்தப்படத்தில் விவேக்குக்கு காமெடியான போலீஸ் அதிகாரி வேடம். அடிக்கடி அதிரடி
முடிவுகளை அவர் எடுப்பதும், அந்த முடிவு உல்டாவாகி அவருக்கே எதிராகத்
திரும்புவதுமாக அமைக்கப்பட்டிருக்கும் நகைச்சுவைக் காட்சிகள் பவானி படத்தின்
ஹைலைட்டாக இருக்குமாம்.
சினேகா, விவேக், சம்பத், தவிர கோட்டாசீனிவாசராவ், ராஜ்கபூர், இளவரசு, ஆர்யன்,
பொன்னம்பலம், வனிதா, ஜி.ஆர். ஆகியோரும் நடிக்கும் பவானி படத்தின் படப்பிடிப்பு
சென்னை, ஹைதராபாத், தென்காசி, குற்றாலம், அம்பாசமுத்திரம் போன்ற ஊர்களில்
நடைபெற்றிருக்கிறது.

இசை: தினா
ஒளிப்பதிவு: எஸ்.கே.பூபதி
பாடல்கள்: பிறைசூடன், யுகபாரதி
சண்டைப்பயிற்சி: தளபதி தினேஷ்
கலை: மனோராஜ்
படத்தொகுப்பு: சலீம்
நடனம்: எஸ்.எல்.பாலாஜி
திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு: ஜி.கிச்சா
movie gallery |