|
சிக்ஸ்பேக் ஆசையெல்லாம் எனக்கு இல்லை...!
கார்த்தி |
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்று சொல்வார்கள். கலையுலக மார்கண்டேயன்
சிவகுமாரின் மகன் கார்த்தி மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா?
அமெரிக்காவிலுள்ள நியூயார்க் யுனிவர்ஸிட்டியில் இண்டஸ்ட்ரியல் என்ஜினியரிங்கில்
எம்.எஸ். பட்டம் பெற்ற இவரை கோடம்பாக்கம் இழுத்துக் கொண்டுவிட, மணிரத்னத்திடம்
ஆய்த எழுத்து படத்தில் உதவி இயக்குனராக வேலைக்கு சேர்ந்தார். உதவி இயக்குநரான
கார்த்தியை பருத்திவீரன் படத்தில் அமீர் கதாநாயகனாக்கிவிட, இன்றைய தேதியில்
கோலிவுட்டின் ஹாட்டான ஹீரோக்களில் கார்த்தியும் ஒருவர். பருத்திவீரனைத் தொடர்ந்து
செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் (பல வருடங்களாக) நடித்து வரும்
கார்த்தி, அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். முதல்
படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்ற
சந்தோஷத்தில் இருக்கும் கார்த்தியிடம் பேசினோம் - அண்மையில்.
"சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற இலக்கை நோக்கி செல்ல ஆரம்பித்த சமயத்தில்
நடிக்கக் கேட்டு வந்து கொண்டிருந்த அழைப்புகளை எல்லாம் தட்டிக்கழித்துக்
கொண்டிருந்தேன். ஆனால் பருத்திவீரன் கதையை அமீர் சொல்லக் கேட்டவுடன் நடிகனாக
வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். நான் நடிகனானதற்கு முக்கியக் காரணமே....
அந்தப் படத்தில் எனது கேரக்டர் ரெகுலர் சினிமாவின் சாக்லட் பாயாகவே இல்லாமல்
இருந்ததுதான். இதுபோன்ற கேரக்டர் சினிமாவில் இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறைதான்
வரும் என்று சினிமாவில் உள்ள ஜாம்பவான்கள் எல்லாம் பாராட்டினார்கள். அப்படியொரு
கேரக்டரில் அறிமுகமானதை நினைத்து பெருமைப்படுகிறேன்.''
உங்கள் இரண்டாவது படமான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் வழக்கமான ஹீரோ கேரக்டர் போல்
தெரிகிறதே?
"ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சாகச நாயகனாக நடிக்கிறேன். அடுத்ததாக லிங்குசாமி
இயக்கத்தில் ஒரு படம். அதில் ஸ்மார்ட்டாக டீஸண்ட் ஹேர்ஸ்டைலில் ஸ்டைல் நாயகனாக
நடிக்க உள்ளேன். இந்தப்படத்துக்காக மேலும் கொஞ்சம் எடையைக் குறைக்க வேண்டும்.
அமெரிக்காவில் பர்கர், பீஸா என்று சாப்பிட்டுப் பெருத்த உடம்பை கொஞ்சம் ட்யூன்
பண்ண டைம் பிடித்தது. தினமும் ஆறு மணிநேரம் உடற்பயிற்சிகள் செய்து
பருத்திவீரனுக்காக பத்து கிலோவை குறைத்தேன். இப்போது மேலும் எடையைக்
குறைக்கப்போகிறேன்.''
உங்க அண்ணன் சூர்யா இளமையாக, ஒல்லியாக உங்களுடைய தம்பி மாதிரி இருக்காரே?
''ஆமாம். அவர் சிக்ஸ்-பேக் ஹீரோ. ஆனா எனக்கு அவரைப்போல் சிக்ஸ்பேக் ஆசையெல்லாம்
இல்லை. சட்டை இல்லாதபோது கூட அழகா... நைஸா... ஃபிட்டா இருந்தாலே போதும் எனக்கு!
சும்மா தசைகளை டைட் பண்ணி நெஞ்சை பார்ட் பார்ட்டா பிரிச்சிக் காண்பிக்கும் ஆசை
எதுவும் எனக்குக் கிடையாது.''
ஆக.. நீங்களும் கதாநாயகி பின்னாடி ஓடி, மரத்தைச் சுற்றி டூயட் பாட
ரெடியாகிட்டீங்கன்னு சொல்லலாமா?
''ஏன் நான் அப்படி பண்ணக்கூடாதா? தமிழ் சினிமாவின் பெரிய இயக்குநர்களில் ஒருவரான
செல்வராகவன் படத்தில் வேலை பண்றேனே! அதில் எல்லாம் இருக்குமே! அடுத்ததாக ஆக்ஷன்
மற்றும் ரொமாண்டிக் ஹீரோவாக நயன்தாராகூட பண்றேன். இப்போதைக்கு இந்த இரண்டையும்
கண்முன்னாடி வச்சிட்டு ஒழுங்கா பண்ணப்போறேன். பருத்திவீரனைப் பார்த்த கமல் ஸார், "கார்த்தி
உனக்குப் பிடிச்ச மாதிரி படத்தை மட்டுமே பண்ணு, என்னை மாதிரி!'' அப்படின்னார். அவர்
சொன்னதை ஃபாலோ பண்ணணும்.''
சினிமா ஸ்டார் என்கிற அந்தஸ்து உங்கள் இயல்பை பாதித்திருக்கிறதா?
''நிச்சயமா இல்லை. இது சூர்யாவுக்கும் பொருந்தும். ஸ்கூலுக்கு பஸ்ஸில் அனுப்பி,
பிறகு சைக்கிளில் அனுப்பி, அகங்காரம் இல்லாத பிள்ளைகளாக எங்க அப்பா அம்மா எங்களை
வளர்த்த விதம் இப்போதும் எங்களுக்கு உதவுகிறது. உண்மையான அன்பு, குடும்பப் பாசம்,
எளிமையான வாழ்க்கை இதற்கு உதாரணமான குடும்பத்தில் வளர்ந்துள்ளோம். ஸோ... எந்த
உயரத்துக்குப் போனாலும் இதில் மாற்றமே இருக்காது.''
உங்கள்அண்ணன் சூர்யாவைப் போல் நீங்களும் நடிகையைத்தான் மணப்பீர்களா?
''இப்போதைக்கு அப்படி எதுவும் நடக்கும் என்று நினைக்கவில்லை.''
நாளை என்ன நடக்கும் யார் அறிவார்?
மேலும்.. |
 |