|
கதைதான் முக்கியம், கதாநாயகர்கள்
அல்ல!
சுப்ரமணியபுரம் பட இயக்குநர் எம்.சசிகுமார் |
முதல்
படத்தின் மூலமே திரையுலகைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த
பாலாவும் அமீரும் இப்போது நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிவீசும்
இயக்குநர்கள். அப்படிப்பட்ட பாலாவிடமும், அமீரிடமும் சினிமாப் பாடம்
கற்று இயக்குநராகியிருப்பவர் எம்.சசிகுமார். இவர் இயக்கிய முதல் படமான
சுப்ரமணியபுரம் எல்லா தரப்பு பார்வையாளர்களையும் கவர்ந்திருக்கிறது.
மட்டுமல்ல, குருவின் பெயரைக்காப்பாற்றிய சிஷ்யர் என்ற பெயரையும்
சசிகுமாருக்கு தேடிக் கொடுத்திருக்கிறது.
தன் குருநாதர்களைப் போலவே கதைக்காகவே நடிகர்கள், திரைப்படம் ஓர்
இயக்குநரின் ஊடகம் என்கிற கொள்கையோடு இயக்குநராக களமிறங்கியிருக்கும்
சசிகுமார் உடன் ஒரு சந்திப்பு.
அது என்ன சுப்ரமணியபுரம்?
இது ஒரு தனி நபரைப் பற்றிய கதையல்ல. ஒரு கதாநாயகன், கதாநாயகி பற்றிய
கதையுமல்ல. ஒரு ஊரில் நடக்கும் கதை. மதுரையில் ஒரு பகுதியான
சுப்ரமணியபுரத்தில் நடக்கும் கதை. பல ஊரில் சுப்ரமணியபுரம் என்ற பெயரில்
தெருவோ நகரோ இருக்கிறது. அதனால் பொதுவான எளிமையான பெயராக
எல்லோருக்கும் தொரிந்ததாக இருப்பதால் சுப்ரமணியபுரம் என்று வைத்தேன்.
ஐந்த இளைஞர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் ஒரு பெண்
நுழைகிறாள். அங்கே ஒரு காதல் துளிர்க்கிறது. நண்பர்கள், காதலாலும்
சமூகத்தாலும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச்
சொல்லியிருக்கிறேன். சுருக்கமாகச் சொன்னால் ஐந்து பேரின் வாழ்க்கை
வரலாறுதான் இந்தக் கதை.
சுப்ரமணியபுரம் படத்தில் வரும் ப்ளாஷ்பேக் காட்சி பேசப்படும் என்று
எதிர்பார்த்தீர்களா...?
படம் தொடங்கியதுமே 27 ஆண்டுகளுக்கு முன் என்று தான் காட்சி
ஆரம்பிக்கும். உடனே 80களில் கதை பயணம் செய்ய ஆரம்பிக்கும். ப்ளாஸ்பேக்
காட்சி விரியும். அப்போது ஓராண்டில் நடக்கும் கதைதான் முழுப்படமும்.
1980ல் இருந்த சந்தோஷமும் பிரச்சனையும்தான் இன்னும் இருக்கிறது. இதை
சொல்லாமல் சொல்லவே இந்த ப்ளாஷ்பேக் உத்தியைத் தேர்வு செய்தேன். ஆனால்
நடைமுறையில் 80களில் நுழைவது சுலபமல்ல. அதற்காக மிகவும் சிரமப்பட்டோம்.
படத்தில் பணிபுரிந்த நடிகர்கள், கேமராமேன், இயக்குநராகிய நான் உள்பட
பலரும் 80களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள். ஆனாலும் அந்தக் காட்சிகள்
எடுக்கப்பட வேண்டும். அந்தக் கால கட்டத்திற்கு ரசிகர்களை அழைத்துச்
செல்ல வேண்டும் என்று கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.
1980 கால கட்ட மக்கள் நடை, உடை, ஊர்களின் தோற்றம், வண்டி, வாகனங்கள்,
பேச்சு, சினிமா என பலவற்றையும் பற்றி தகவல் சேகரித்து வைத்துக்
கொண்டுதான் படப்பிடிப்பைத் தொடங்கினோம். காலமும் விஞ்ஞானமும் எவ்வளவோ
மாறியிருக்கிறது. அன்று இருந்த சுப்ரமணியபுரம் பகுதிபோல இன்றில்லை.
எனவே பல காட்சிகளை செட் போட்டுத்தான் படமாக்கினோம். முக்கியமாக
படத்தில் பயன்படுத்தப்பட்ட உடைகளுக்காக மிகவும் சிரமப்பட்டோம்.
இந்தக் கதைக்கு நட்சத்திர நடிகர்களைத் தேடினீர்களா? அல்லது உங்களின்
முதல் சாய்ஸே ஜெய்தானா?
முதலில் ஒரு நடிகரைத்தான் அணுகினோம். அவர் ஒரு புதுமுக நடிகர். அவர்
நடித்த முதல் படமே வெளி வரவில்லை. அதற்குள் கதையை மாற்ற வேண்டும்.
காட்சியை மாற்ற வேண்டும் என்றார். ஒரு படம் வெளி வருவதற்குள் இவ்வளவு
ஆர்ப்பாட்டமாக இருக்கிறாரே? இவரை நடிக்க வைத்து படத்தை முடிப்பது எப்படி
என்று யோசித்த நான் பிறகு அவர் வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன்.
இது தான் கதை. அதை யாருக்காகவும் வளைக்க மாட்டேன். என் கதைக்கு
ஏற்றவர்களைத் தேடினேன். நடிக்க வைத்தேன்.
சுப்பிரமணியபுரம் படத்தில் நீங்களும் நடித்திருக்கிறீர்கள்,
தயாரிக்கவும் செய்திருக்கிறீர்கள். முதல் படத்திலேயே இப்படி ரிஸ்க்
எடுத்தது ஏன்?
ஆரம்பத்தில் எனக்கு நடிக்கும் எண்ணமே இல்லை. நான் நடித்த அந்தக்
கேரக்டரில் வேறு ஒருவர்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த நடிகர்
சரிப்பட்டு வரவில்லை. அதன் பிறகுதான் நானே நடிப்பது என்று முடிவு
செய்தேன். படத் தயாரிப்பினைக் கூட முதலில் அமீரின் டீம் ஒர்க்ஸ்
நிறுவனம்தான் செய்வதாக இருந்தது. ஆனால் அவர்கள் தங்கள் பருத்தி வீரன்
படத்தை வெளியிடுவதில் தீவிரம் காட்டினார்கள். அதற்கே பல போராட்டங்களைச்
சந்திக்க வேண்டிருந்தது. இந்த நிலையில்தான் நானே தயாரிப்பது என்று
முடிவெடுத்தேன். அதுதான் கம்பெனி புரொடக்ஷன்ஸ்.
தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் இருந்த அனுபவம் எப்படி?
இந்தப் படத்தைப் பொருத்தவரை இத்தனை நாளில் முடிக்க வேண்டும். இவ்வளவு
ரோலில் முடிக்க வேண்டும் என்று எந்தக் கால அளவும் இலக்கும்
நிர்ணயிக்கவில்லை. எடுத்துக் கொண்ட கதையை நினைத்த மாதிரி எடுப்பது
ஒன்றே இலக்கு என்று நினைத்து எடுத்தோம். நடிகர்கள் எனக்கு திருப்தி
வராமல் திரும்பத் திரும்ப பல டேக் வாங்கிய போது அவர்கள்
பதட்டப்பட்டார்கள். நீங்கள்தான் தயாரிப்பாளர் இவ்வளவு செலவழிக்கிறீர்களே
என்றார்கள். நான் தயாரிப்பாளர் என்பதை நீங்கள் நினைக்க வேண்டாம். மறந்து
விடுங்கள். ஒரு இயக்குநராக நான் சொல்வதை மட்டும் நீங்கள் கேட்டால்
போதும் என்று அப்போது நான் சொன்னேன். அதனால்தான் இதை ஓர் இயக்குநரின்
படமாக ரசித்து ரசித்து உருவாக்க முடிந்தது.
கதாநாயகியை எங்கே கண்டு பிடித்தீர்கள்?
கதாநாயகியின் பெயர் ஸ்வாதி. இவரை செல்வராகவன் இயக்கிய தெலுங்குப்
படத்தைப் பார்த்து தேர்ந்தெடுத்தேன். அதில் த்ரிஷாவின் தங்கையாக வருவார்.
ஸ்வாதி நடித்து டேஞ்சர் என்றொரு தெலுங்குப் படமும் வந்திருக்கிறது. மா
டிவியில் கலர்ஸ் ஸ்வாதி என்றொரு நிகழ்ச்சி வருகிறது. அதில் நம்மூர்
பெப்சி உமா மாதிரி ஸ்வாதி பிரபலம். எவ்வளவோ பேரைப் பார்த்து கடைசியில்
ஸ்வாதிதான் நான் எதிர்பார்த்த மாதிரி இருந்தார். தேர்ந்தெடுத்து
விட்டேன்.
சுப்பிரமணியபுரம் படத்தில் என்ன புதுமைகளை கையாண்டிருப்பதாக
நினைக்கிறீர்கள்?
எல்லா வார்த்தைகளும் சொல்லப்பட்டு விட்டன. சொல்கிற வாய்கள் தான் வேறு
வேறாக இருக்கின்றன என்று ஒரு பொன் மொழி சொல்வதுண்டு. சினிமாவில் கூட
எல்லா கதைகளும் வந்துவிட்டன. சொல்கிற விதம்தான் மாறுபடுகிறது. என்
படத்தை பொறுத்தவரை சொல்கிற விதம் புதிதாக இருப்பதாக நினைக்கிறேன்.
மற்றபடி வித்தியாசம் என்கிற வார்த்தையை நான் பயன்படுத்த விரும்பவில்லை.
இதில் கஞ்சா கருப்பு தவிர எல்லோருமே புதியவர்கள். தொழில் சாராத
பதினைந்து நடிகர்களை திண்டுக்கல் பகுதியிலிருந்து கண்டெடுத்து நடிக்க
வைத்துள்ளேன். படம் பார்க்கும் அனைவருக்குமே அவர்கள் அனைவரும் நினைவில்
நிற்பார்கள். படத்தில் பங்கேற்பவர்கள் பலரும் இளைஞர்கள், புதியவர்கள்.
இயக்கம், தயாரிப்பிற்கு நான் புதியவன். ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிருக்கு
முதல் படம் இது. எனக்கு கொடைக்கானல் செயின்ட் பீட்டர்ஸ் ஸ்கூலில் இசை
ª£ல்லிக் கொடுத்த ஆசிரியர் ஜேம்ஸ் வசந்தன் தான் இசையமைப்பாளர். படத்
தொகுப்பு ராஜா முகமது, கலை ரெம்போன், உடைகள் நடராஜ், நடனம் தினேஷ் என
புதியவர்களும் இளைஞர்களும் இணைந்து உருவாக்கிய படம் இது. நடிக்க
ஸ்வாதியை அணுகிய போது ஆரம்பத்தில் அவருக்கு ஆர்வம் இல்லை, தனக்கு
நடிக்க விருப்பம் இல்லையென்பதை நேரில் சொல்லவே சென்னைக்கு வந்தார்.
படக் குழுவினர், இளைஞர் கூட்டணியைப் பார்த்த பிறகுதான், மனம் மாறி
நடிக்கச் சம்மதித்தார்.
உங்கள் குருநாதர்களான பாலா, அமீரிடம் கற்றது என்ன?
பாலாவுடன் நான் பணியாற்றிய ஒரே படம் சேது. அதன் பிறகு அமீர் உடன்
வந்துவிட்டேன். பாலாவிடம் பார்த்து கற்றுக் கொண்டது நிறைய. அமீர்
எனக்கு நண்பர் மாதிரியும், அண்ணன் மாதிரியும் இருந்தார். அவர் நிறைய
சொல்லி கொடுப்பார். அவரிடம் நான் நிறைய திட்டும் வாங்கியிருக்கிறேன்.
அதை திட்டல் என்று நினைக்கவில்லை. தீட்டல் என்றுதான் நினைப்பேன். அதனால்
அவர் மீது வெறுப்புணர்ச்சி வரவில்லை. எனக்கு பொறுப்புணர்ச்சிதான்
வந்தது. சிலர் என்னிடம் கேட்பதுண்டு உங்களை மட்டும் அதிகம் திட்டுகிறாரே
என்று. அவர் என் அண்ணன். என்னைத்தான் திட்டுவார் என்பேன். அந்த அளவுக்கு
என்னிடம் அவருக்கு உரிமையும் அன்பும் நெருக்கமும் உண்டு.''
மேலும்.. |
 |