|

யுனைடெட் ஸ்டார் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஜி.தேவராஜ் நிறைந்த
பொருட்செலவில் தயாரிக்கும் புதிய படம் - சோக்காலி. இப்படத்தின் கதை, திரைக்கதை,
வசனம் எழுதி இயக்குகிறார்: சரணா ஏ.
இப்படத்தில் சைதன்யா என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் மானாட மயிலாட
நடன நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்றவர். அவருக்கு ஜோடியாக நயனா என்ற புதுமுக நடிகை
நடிக்கிறார். இன்னொரு கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
மற்றும் கஞ்சா கருப்பு, சோனா, சிட்டிபாபு, மோகன்ராம், அஞ்சலி தேவி, விஜிகிட்டி,
கராத்தே ராஜா, அலக்ஸ், ஹேமலதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

பெண்கள் மீது மோகம் கொண்டு அலைபவர்களைக் குறிக்கும் சோக்காலி என்ற வார்த்தையை
படத்தின் தலைப்பாகக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதையும் பெண் பித்தன்
ஒருவனைப்பற்றியதுதான். படத்தின் கதாநாயகன் டி.வி.சேனலில் வி.ஜே. என்கிற நிகழ்ச்சித்
தொகுப்பாளராக இருப்பவன். அவனது குரலிலும், அழகிலும் மயங்கிய பல இளம்பெண்கள் அவனை
மொய்க்கிறார்கள். இளம்பெண்கள் மத்தியில் தனக்கிருக்கும் கவர்ச்சியை உணர்ந்த அவன்,
ரசிகைகளாக தன்னைத் தேடி வரும் பெண்களை தன் ஆசைக்குப் பயன்படுத்துவதை வழக்கமாக
வைத்திருக்கிறான்.
அவனது இந்த குணத்தை அறியாத கதாநாயகியோ அவனை உயிருக்குயிராக விரும்புகிறாள். அவனோ
எல்லா பெண்களையும்போலவே அவளையும் ஒரு தடவை அனுபவித்துவிட்டு, அவளது காதலை
நிராகரித்துவிடலாம் என்று திட்டமிடுகிறான். அவனது சதித்திட்டம் தெரியாமல் அவனுடன்
நெருங்கிப்பழகுகிறாள் கதாநாயகி. முடிவு என்ன? பெண் பித்தனான கதாநாயகனின் காமம்
நிறைவேறியதா? உண்மைக்காதலுக்காக உருகிய கதாநாயகியின் காதல் நிறைவேறியதா என்பதுதான்
இப்படத்தின் க்ளைமாக்ஸ்.

காதல் கதையானாலும் இன்றைய இளைஞர்களுக்கு வலுவான கருத்தையும் சொல்கிற வகையில்
இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சரணா.ஏ.
ஒளிப்பதிவு: ஜெ.மோகன்
இசை: ஜோஷ்வாஸ்ரீதர்
பாடல்கள்: நா.முத்துகுமார்
கலை: நந்தகுமார்
நடனம்: சிவசங்கர், ஜானி, தேவா சம்பத்
சண்டைப்பயிற்சி: தவசிராஜ்
படத்தொகுப்பு: மகாவிஷ்ணு
தயாரிப்பு மேற்பார்வை: என்.ஜனார்தனன்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: சரணா ஏ.
தயாரிப்பு: ஜி.தேவராஜ்

இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிவடைந்தது.
இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு திருச்சி, ஊட்டி, கொடைக்கானல் போன்ற ஊர்களில்
நடைபெறுகிறது.
|