|

சூப்பர் ஸ்பிரிங்ஸ் என்டெர்டயின்மென்ட் இந்தியா பி.லிட்., என்ற பட நிறுவனம் நிறைந்த
பொருட்செலவில் மிக பிரம்மாண்டமான படைப்பாக உருவாக்கும் புதிய படம் - பேசு.
இயக்குநர் கதிரிடமும், இயக்குநர் துரையிடம் தொட்டிஜெயா படத்திலும், கலாபிரபுவிடம்
சக்கரக்கட்டி படத்திலும் உதவி இயக்குநராக பணிபுரிந்த புதுமுக இயக்குநர் ரா.சிரில்
இந்தப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
அமெரிக்காவில் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்த ஜெ.விக்னேஷ் என்ற புதுமுகம்
கதாநாயகனாக அறிமுகமாகிறார். லீலை படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து
வரும் விபா இப் படத்தில் தனிக்கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மற்றும் மகாதேவன், எம்.எஸ்.பாஸ்கர், ராஜலட்சுமி, சச்சு, அஜய்ரத்னம் ஆகியோருடன்
காக்க காக்க படத்தில் நடித்த ஜெப்பி வில்லனாக நடிக்கிறார்.
கொடைக்கானல், ஊட்டி, குலு, மணாலி, கோவா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்ற
நிலையில் கடைசிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

பேசு படத்தில் இடம்பெறும், ‘உந்தன் வார்த்தையில் எந்தன் கவிதைகள்’ என்ற பாடல்
காட்சி சமீபத்தில் கோவாவில் படமாக்கப்பட்டது. கதாநாயகன் ஜெ.விக்னேஷ், கதாநாயகி விபா
பங்குபெற்ற இப்பாடல் காட்சி, கோவாவில் உள்ள வித்தியாசமான லொகேஷன்களில்
படமாக்கப்பட்டது. இது வரை படப்பிடிப்பு நடத்தப்பட்டிராத இடங்களாக தேர்வு செய்து
இந்த பாடல் காட்சியை படமாக்கி இருக்கிறார் இயக்குநர் சிரில்.
என் பேர் என் தேவதை ஒருமுறை என்ற மற்றொரு பாடல் காட்சி வித்தியாசமான ஒளியமைப்பில்,
அதாவது முழுக்க முழுக்க மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே படமாக்கப்பட்டிருக்கிறது.
இப்பாடல் காட்சி ஒளியமைப்பு ஆங்கிலப்படத்துக்கு நிகரான தரத்துடன்
படமாக்கப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.
‘பேசு படத்தில் இரண்டு வண்ணங்களை அடிப்படையாக வைத்து காட்சிகளை அமைத்திருக்
கிறேன்.’ என்று சொல்லும் இயக்குநர் சிரில், பேசு படத்தின் கதையைப் பற்றியும்
சொல்கிறார்...
‘ஒரு மழைக்காலத்தில் தொடங்கி பனிக்காலத்தில் முடிவடைகிற எளிமையான காதல் கதை இது.
பேசு என்பது படத்தின் தலைப்பாக இருந்தாலும் படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் அதிகமாக
பேச மாட்டார்கள். வசனங்களும் வெகு குறைவாகவே இருக்கும்.இது ஒரு காதலர்களின் கதை
மட்டுமல்ல, மற்றொரு காதலின் நினைவுகளின் நீட்சியாகவும் இருக்கும்.’
பேசு படம் விரைவில் வெளியாகிறது.
வசனம்: எஸ்.ராமகிருஷ்ணன், ஒளிப்பதிவு: ராசாமதி, இசை: யுவன்சங்கர்ராஜா, பாடல்கள்:
சினேகன்
கலை: வனராஜன், படத்தொகுப்பு: குபேந்திரன், சண்டைப்பயிற்சி: கில்லி சேகர், தயாரிப்பு
மேற்பார்வை: மல்லியம்பட்டி மாதவன், தயாரிப்பு நிர்வாகம்: ராஜ்குமார், சாய்சுந்தர்
கதை, திரைக்கதை, இயக்கம்: ரா.சிரில்
தயாரிப்பு: சூப்பர் ஸ்பிரிங்ஸ் என்டெர்டயின்மென்ட் இந்தியா பி.லிட்.,
வி.ஜெகன்னாதன்
|