|

பட்டிக்காட்டு தம்பி, பாட்டாளி மகன், விக்னேஷ்வர் ஆகிய வெற்றிப்படங்களைத் தயாரித்த
கே.எஸ்.கோவைமணியின் அன்புலட்சுமி பிலிம்ஸ் மிகப்பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் மாசி
படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் அர்ஜுன். சரத்குமார் நடித்த நேதாஜி, சத்யராஜ்
நடித்த தங்கம், சுந்தர்.சி நடித்த தீ ஆகிய படங்களை இயக்கி, தற்போது சினேகா
நடிப்பில் வளர்ந்துவரும் பவானி படத்தை இயக்கி வரும் ஜி.கிச்சா கதை, திரைக்கதை,
வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.
கதாநாயகியாக மும்பையைச் சேர்ந்த அர்ச்சணா என்ற புதுமுக நடிகை நடிக்கிறார். மற்றும்
ஹேமா கங்கா, மயில்சாமி, கோட்டாசீனிவாசராவ், சந்தானபாரதி, பாண்டு, பொன்னம்பலம், தூள்
சகுந்தலா, கலைராணி, சுப்புராஜ், சத்யபிரகாஷ், ஜிஆர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் கஜினி படத்தில் வில்லனாக நடித்த பிரதீப்ராவத் நடிக்கிறார்.
மாசி படத்தில் மாசிலாமணி என்ற துடிப்பான போலீஸ் அதிகாரி வேடம் ஏற்றிருக்கிறார்
அர்ஜுன். இதற்கு முன் எத்தனையோ படங்களில் போலீஸ் அதிகாரியாக அவர்
நடித்திருந்தாலும், இதுவரை நடித்திராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தை இந்தப்படத்தில்
ஏற்றிருக்கிறார். அதாவது, தன் அறிவைப் பயன்படுத்தி எதிரிகளை நிலைகுலைய வைத்து
அவர்களை அழிக்கும் புத்திசாலித்தனமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப்படத்தில் வில்லன் வேடத்தை ஏற்றிருக்கும் பொன்னம்பலம் மொட்டையடித்துக் கொண்டு
நடிக்கிறார். அர்ஜுன் - பொன்னம்பலம் பங்கு பெற்ற ஒரு சண்டைக்காட்சி ஹைதராபாத்தில்
உள்ள ஒரு அலுமினிய பேக்டரியில் அண்மையில் படமாக்கப்பட்டது. 500 கார்களுடன், ஏராளமான
ஸ்டண்ட் கலைஞர்கள் நடித்த இந்த சண்டைக்காட்சியை ஏழு கேமராக்களைக் கொண்டு
மிகப்பிரம்மாண்டமாக படமாக்கினார் இயக்குநர் ஜி.கிச்சா. ஒரு சண்டைக்காட்சிக்கு ஏழு
கேமராக்களை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தியது இந்திய சினிமாவிலேயே இதுதான்
முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மாசி படத்தில் நடிப்பது தனக்கு ப்ரஷ்ஷான உணர்வை தந்திருப்பதாக சொல்லும் அர்ஜுன்,
ஜி.கிச்சா உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியைத் தருவதாகவும் சொன்னார். அதோடு,
‘நான் இதுவரை 90 இயக்குநர்களிடம் பணியாற்றி இருக்கிறேன். 140 படங்களில்
நடித்திருக்கிறேன். இயக்குநர் கிச்சா உடன் பணியாற்றியது வித்தியாசமான அனுபவமாக
இருந்தது. எந்த சீனில் என்ன டயலாக் என்பதை எல்லாம் சீன் பேப்பரை பார்க்காமலே
சொல்லும் அளவுக்கு மாசி படத்தின் மொத்த ஸ்கிரிப்டையும் மனப்பாடம் செய்து
வைத்திருக்கிறார். அவருடைய டெடிகேஷன் என்னை ஆச்சர்யப்படுத்தியது.’ என்றும்
சொல்கிறார்.

அதிரடி ஆக்ஷன் படமாகவும் நவீன தொழில்நுட்பத்துடனும் உருவாகி வரும் மாசி படத்தின்
படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், ஹாங்காங், பாங்காக் போன்ற இடங்களில் நடைபெறுகிறது.
ஒளிப்பதிவு: எஸ்.கே.பூபதி, பாடல்கள்: ஜி.கிச்சா, யுகபாரதி, கலை: மனோராஜ்,
படத்தொகுப்பு: எஸ். சலீம், நடனம்: தினேஷ், ஷோபி, சண்டைப்பயிற்சி: அனல்அரசு,
தயாரிப்பு நிர்வாகம்: சங்கர்,தயாரிப்பு மேற்பார்வை: டி.பி.வெங்கடேஷ்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ஜி.கிச்சா
தயாரிப்பு: கே.எஸ். கோவைமணி
|