|

அருணை பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஜி.தனலட்சுமி மிகப்பிரம்மாண்டமாகத்
தயாரித்து வரும் புதிய படம் - இளமை இதோ இதோ. தெலுங்குத்திரையுலகின் மணிரத்னம் என்று
அழைக்கப்படும் பிரபல தெலுங்குப்பட இயக்குநர் பூரிஜெகன்னாத்திடம் இணை இயக்குநராக பல
படங்களில் பணியாற்றிய பி.ராஜா இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குநராக
அறிமுகமாகிறார்.
அவிதேஜ், திரிநாத் என்ற இரண்டு புதுமுகங்கள் இப்படத்தில் கதாநாயகர்களாக அறிமுகமாக,
அவர்களுக்கு ஜோடியாக, மும்பையைச் சேர்ந்த பிரபல மாடல்களான வைணவி, பார்வதி இருவரும்
நடிக்கின்றனர்.

காதலில் தோல்வியுற்றதால், காதலுக்கு எதிரியாக மாறி காதலர்களை பிரிப்பதையே கட்சியின்
கொள்கையாக வைத்திருக்கும் கா.க.க.(காதலுக்கு கல்லறைக்கட்டும் கழகம்) என்ற கட்சியின்
தலைவராக தங்கராசு என்ற வித்தியாசமான நகைச்சுவை வேடத்தில் விவேக் நடிக்கிறார்.
சர்க்கார் ஹிந்திப்படத்தில் அமிதாப் பயன்படுத்தியது போன்ற விக் அணிந்து மாறுபட்ட
கெட்டப்பில் நடிக்கிறார்.

மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தி, ரேகா ஆகியோருடன் பிரபல தெலுங்கு குணச்சித்திர நடிகர்
பானர்ஜி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் டெல்லியைச் சேர்ந்த தஸ்லீமா
என்ற கவர்ச்சி நடிகை ஒரு பாடல் காட்சியில் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
எத்தனையோ காதல் படங்கள் வெளி வந்திருந்தாலும், அவற்றிலிருந்து முழுமையாய்
வித்தியாசப்பட்ட படமாக இளமை இதோ இதோ படம் உருவாகி இருக்கிறது. இளைஞர்களுக்குப்
பிடித்தமான பொழுதுபோக்குப் படமான இதில் இன்றைய இளைஞர்களின் நட்பு, காதல்,
வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டம் என அவர்களின் வாழ்க்கை யதார்த்தமாக பதிவு
செய்யப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, காதல் மட்டுமே வாழ்க்கை என்ற தவறான போதனை
கூறாமல், வாழ்க்கையில் காதல் ஒரு பகுதி மட்டுமே என்ற புதிய பிரகடனமும்
செய்யப்பட்டிருக்கிறது.
கல்லூரிப் பின்னணியில் நிகழும் இளமை இதோ இதோ படத்தின் பெரும்பாலான காட்சிகள்
கல்லூரியிலும், கதாநாயர்களின் வசிப்பிடமான காலனியிலும், கதாநாயகிகளின் வசிப்பிடமான
ஹாஸ்டலிலும் படமாக்கப்பட்டிருக்கிறது.

இளமை இதோ இதோ படத்தின் பாடல் காட்சிகள் வித்தியாசமான லொகேஷன்களில்
படமாக்கப்பட்டிருக்கின்றன. குலுக்கிக் குலுக்கி குலுக்கிப் போனாளே..என்ற பாடல்
காட்சி மலேஷியா மற்றும் தாய்லாந்தில் உள்ள பாங்காக், புக்கட் தீவில்
படமாக்கப்பட்டிருக்கிறது. இளமை துள்ளும் படு கலாட்டாவான இந்தப்பாடலுக்கு, டான்ஸ்
மாஸ்டர் ஸ்ரீதர் வித்தியாசமான நடனம் அமைக்க, அவிதேஜ், திரிநாத், வைணவி, பார்வதி
ஆகியோர் ஆடிப்பாடினார்கள். இந்தப்பாடலும், தஸ்லிமா ஆட்டம்போட்ட குத்துப்பாடலும்
இப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.
வசனம்: ராஜ்கண்ணன், ஒளிப்பதிவு: ஆகாஷ் அசோக்குமார், இசை: வித்யாசாகர்,பாடல்கள்:
பா.விஜய், மதன் கார்க்கி (கவிஞர் வைரமுத்துவின் மகன்), படத்தொகுப்பு: வி.டி.விஜயன்,
கலை: வெங்கல் ரவி, நடனம்: ஸ்ரீதர், தயாரிப்பு நிர்வாகம்: ரா.சரவணன்,தயாரிப்பு
மேற்பார்வை: முருகன், நிர்வாகத் தயாரிப்பாளர்: என்.கோபால்
கதை, திரைக்கதை, இயக்கம்: பி.ராஜா
தயாரிப்பு: ஜி.தனலட்சுமி
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இளமை இதோ இதோ திரைப்படம்
விரைவில் வெளிவரவிருக்கிறது. |