NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..NEWS..VIEWS..REVIEWS..

 

Editor:
J.Bismi 

Home

Feedback:
editor@tamilscreen.com
Thursday, September 10, 2009
       
விமர்சனம் பேட்டி கிசுகிசு ப்ளாஷ்பேக் கட்டுரைகள் பயோடேட்டா
கவர்ச்சீய்படங்கள் குளிர்ச்சிபடங்கள் சின்னத்திரை உலகசினிமா குறும்படங்கள் ஆவணப்படங்கள
       
  Interview

  

 

 

எனக்குக் கமர்ஷியல் எழுத்தும் வரும் கவித்துவ எழுத்தும் வரும்

கவிஞர் விவேகா

ஒன்றின் மீது ஆசை வந்து விட்டாலே, அதை அடையும் திறமை வந்துவிட்டது என்று அர்த்தம். இது வெளிநாட்டுப் பழமொழி. ஆசை திறமையாக மாறலாம். திறமை காட்ட வாய்ப்பு அமைய வேண்டும். வாய்ப்பு அமைய காலம் கனிய வேண்டும். காலம் கனியவைத்த வாய்ப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்கவேண்டும். அப்படிக்கிடைத்த வெற்றியால் மகிழ்ச்சியும் வளர்ச்சியும் உறுதி. இப்படி அனைத்தும் இணைந்த அனுபவத்தின் பரவசத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர் விவேகா. கனவு மெய்ப்பட்ட பூரிப்பில் இருக்கிறார் இவர். காரணம் கந்தசாமி படம் - பாடல்கள். இன்று தமிழக - தமிழ்பேசும் காற்றுவெளிகளில் காந்த அலைகளாக அதிர வைத்துக் கொண்டிருப்பவை கந்தசாமி படத்தின் பாடல்கள். படம் வெளியான ஒருவாரத்தில் 37 கோடிகளை வசூல் செய்துள்ளது. பாடல் சிடிக்கள் லட்சக்கணக்கில் விற்பனையாகி - விற்பனையாகிக் கொண்டு சாதனை தொடர்கிறது.
இப்படி வசூல் சத்தமும் விசில் சத்தமும் கலந்து கட்டி கலக்குகிற கந்தசாமி பலருக்கும் வரம் தந்தசாமியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. கந்தசாமி பாடல்களின் பிரம்மாண்டமான வெற்றி விவேகாவின் எழுத்து வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. ஏற்கெனவே இவர் பாடல் எழுதி வெளி வர வேண்டிய படங்கள் 25 இருந்தாலும், கந்தசாமிக்குப் பின் முப்பது புதிய படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்புகள்.
தவம் வரமான சந்தோஷ சிலிர்ப்பில் இருக்கும் விவேகாவுடன்.... இனி...
விவேகாவின் வாழ்க்கைப் பாதையை க.மு. (கந்தசாமிக்கு முன்) க.பி. (கந்தசாமிக்குப் பின்) இரு வகையாகப் பிரிக்கலாம்.

கந்தசாமிக்குப் முன் விவேகா எப்படி?
திரைப்பாடல் எழுத வேண்டும் என்பது என் கனவு, லட்சியமானது இருந்தது. பள்ளி கல்லுரி மேடைகளில் கவியரங்கம், பேச்சு என்றிருந்த நான், செல்ல வேண்டிய திரை திரைப்படம் என்பதை தீர்மானித்தேன்.
சொந்த ஊரான வேடங்குளத்தை விட்டு சென்னை வந்தேன். போராடினேன். தடைகள் வந்தபோது லியில்லை. வருத்தமில்லை. செல்ல வேண்டிய பாதையின் பயண அனுபவமாகவே எடுத்துக் கொண்டேன். இப்படிச் சொல்கிற விவேகாவின் சமீபத்திய வெற்றிப் பாடல்கள் சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தில் கோழி வெடக்கோழி, திருவிளையாடல் ஆரம்பம், விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய், மதுரை ஜில்லா மச்சான்தாண்டி, சந்தோஷ் சுப்பிரமணியம் எப்படி இருந்த என் மனது, அமெரிக்கா என்றாலும், வில்லு டாடிமம்மி வீட்டில் இல்ல, மாசிலாமணி, சிக்குசிக்கு பூம் பூம், ராமன் தேடிய சீதை இப்பவே இப்பவே போன்றவை.
கந்தசாமி படத்தில் எல்லாப் பாடல்களும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. எழுதிய எட்டுப் பாடல்களும் எட்டுத்திக்கையும் எட்டிய வெற்றி, பலமுனையிலிருந்து பாராட்டுகள், வாழ்த்துகள் மற்றும் வாய்ப்புகளையும் தேடிக் கொடுத்துள்ளது.

கந்தசாமிக்குப் பின் விவேகா எப்படி?
கந்தசாமி பாடல்கள் வெளியாகி சில நாட்களிலேயே ஏராளமான தொலைபேசி வாழ்த்துகள் வந்தன. இன்னும் வருகின்றன. பெரிய பெரிய தொழிலதிபர்கள் வி.ஐ.பிக்கள் முதல் சின்னஞ்சிறுவர் வரை பேசுகிறார்கள். நினைத்துப் பார்க்காத ஊர்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் பேசுகிறார்கள். மிகவும் வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஏராளமான புதிய படவாய்ப்புகளையும் தேடிக் கொடுத்திருக்கிறது.

அத்தனையும் பெற்றுக் கொடுத்திருக்கிற கந்தசாமி பட அனுபவத்தைப் பற்றி என்ன கூறுகிறார் விவேகா?
சுசிகணேசன், இலக்கியப் பரிச்சயமுள்ள இயக்குநர், நல்ல ரசனை கொண்ட சிந்தனையாளர், அவரது முந்தைய படமான பைவ் ஸ்டாரில் ஒரு பாடல் எழுதியிருக்கிறேன்.
இசையமைப்பாள்ர தேவிஸ்ரீபிரசாத் இசையில் பல படங்களில் எழுதியிருக்கிறேன். சந்தோஷ் சுப்ரமணியம், சம்திங் சம்திங், வில்லு படங்களில் அவரது இசை, என் வரிகள் கூட்டணி, வெற்றிக் கூட்டணி.
ஒரு நாள்... இயக்குநர் சுசி என்னை தொலைபேசியில் அழைத்தார். அப்போது கந்தசாமி படப்பிடிப்பு தேனியில் நடந்து கொண்டிருந்தத. தேனி சென்றேன். நல்ல மழை. சண்டைக் காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். மழைநேர இடைவெளியில் என்னிடம் பேசினார். ட்யூன் கொடுத்தார். முதல் ட்யூனுக்கு நான் எழுதியது மேம்போ மாமியோ... அது அவருக்குப் பிடித்துவிட, அடுத்தது கொடுத்தார். அதற்கு எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி எழுதினேன். அந்த ஸ்டைல் இயக்குநர், ஹீரோ விக்ரம் எல்லோருக்கும் பிடித்து விடபே அடுத்து ஒரு பாடல். அதுதான் எம்பேரு மீனா குமாரி அது வரை எனக்குத் தெரியாது முழுப்பாடல்களும் நான்தான் என்று. மூன்று பாடல்களை முடித்த பின்தான் சுசி கூறினார் நீங்கதான் எல்லாப் பாடல்களும் எழுதுறிங்க என்று. எனக்கு இன்ப அதிர்ச்சி. படத்தில் எட்டுப் பாடல்கள். இன்று எல்லாமே பெரிய வெற்றி.
தயாரிப்பாளர் தாணுசார் கூறும்போது சுகி எளிதில் திருப்தி அடையமாட்டார். அவரை உன் வரிகள் திருப்திப்படுத்தியது என்றால் அது உன் திறமை என்றார். இதை ஒரு தரச்சான்றிதழ் போல நினைத்துக் கொண்டேன்.
படத்தின் நாயகன் விக்ரம், நான் எத்தனையோ படங்களில் பாடல் காட்சிகளில் நடித்திருக்கிறேன். பாடல்களில் சில வரிகள் மட்டுமே ஞாபகம் இருக்கும். ஒரு படத்திலுள்ள அனைத்து பாடல்வரியும் ஞாபகத்தில், இருப்பது கந்தசாமி பாடல்கள் மட்டும்தான் என்றார். அதுமட்டுமல்ல சில வரிகளைப் பார்த்து விவேகா குறும்புக்காரர் என்று எல்லாரிடமும் கூறியிருக்கிறார்.
பாடல் வெளியீட்டு விழாவிலேயே தயாரிப்பாளர் தாணுசார் இதில் தம்பி விவேகா எட்டுப் பாடல்கள் எழுதியிருக்கிறார். அவை எட்டுத் திக்கும் பேசப்படும். தமிழ்நாடு முழுக்க சூப்பர் ஹிட் ஆகும் என்றார். அவர் கூறியபடியே ஆடியோ முதல் வாரத்திலேயே ஒரு லட்சம் சிடி விற்பனையானது.
கந்தசாமி பாடல்கள் சிறப்பாக அமைய இயக்குநரின் துண்டுதல் மட்டுமல்ல இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்துக்கும் எனக்கும் உள்ள புரிதலும் ஒரு காரணம் என்பேன். அவரது இசையில் எழுதும் போது எழுத்து ஒரு தொழிலாக, வேலையாகத் தெரியாது. மகிழ்ச்சி அனுபவமாக இருக்கும். இப்படி எல்லா வகையிலும் கந்தசாமி மறக்க முடியாதபடி அமைந்திருந்தது.

திரைப்பாடல்களில் கவிதை செய்வது எந்த அளவுக்கு சாத்தியம் என்கிறார் விவேகா?
திரைப்பாடல் எழுதுவது வேறு கவிதை எழுதுவது வேறு. திரைப் பாடலில் கவிதையை சாத்தியப்படுத்துவது சில நேரம் மட்டுமே வாய்க்கும். ஒரு பாடல் எழுதும்போது அதன் ஆழத்தை, அகலத்தை கதையும் சூழலுமே தீர்மானிக்கும். கதைக்குள் ஏற்ற சூழல் இருக்கும்போது இலக்கியத் தரமான வரிகள் வரும். இயக்குநர் ஷங்கர் தயாரித்துள்ள ஈரம் படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளேன். பாடல்களை சூப்பர் ஸ்டார் ரஜினிசார் வெளியிட்டார். அந்த விழாவில் பேசும்போது, ஷங்கர்சார் இந்தப் படத்தில் விவேகா சிறப்பான வரிகளை பாடல்களில் எழுதியுள்ளார். சாரல் ஏன் என் ஜன்னலை உதைக்கிறது பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். இது என் வரிகளுக்குக் கிடைத்த பாராட்டு என்று அடக்கத்துடன் குறிப்பிடுகிறார் விவேகா.

தன் பாணியாக விவேகா எதைக் குறிப்பிடுகிறார்? யார் வழி இவர் வழி?
எழுதுவதை விட எழுவதுதான் எழுத்து. திரைப் பாடல்களின் நிறம், தரம் போன்றவை கொடுக்கப்படும் வாய்ப்பு - கதைச் சூழல் இவற்றைப் பொறுத்தே அமையும்.
ஒருவருடைய வாசிப்பு அனுபவமும் வாழ்க்கை அனுபவமுமே வார்த்தையாய் வரிகளாய் வெளிப்படும். என்னுடைய - எனக்கான வாசிப்பும் வாழ்க்கை அனுபவமும் முழுக்க முழுக்க என்னுடையவை. அதை யாரும் நகலெடுக்க முடியாது. யார் வாழ்க்கை அனுபவத்தையும் நான் நகலெடுக்க முடியாது. எனவே என் பாதையும் பயணமும் தனியாகவே இருக்கும்.

விவேகாவின் சமீபத்திய சந்தோஷம்?
என் பல பாடல்கள் குழந்தைகளைக் கவர்ந்ததாக இருக்கின்றன. பல வி.ஐ.பி.க்கள் எனக்குப் போன் செய்து தங்கள் குழந்தைகளுடன் பேச வைக்கிறார்கள். அவர்கள் பெயர் சொன்னால் விளம்பரமாகிவிடும். என் டாடி மம்மி வீட்டில் இல்ல, மியாவ் மியாவ் பூனை குழந்தைகளின் ரைம்ஸ் ஆகிவிட்டன. இது பெரிய சந்தோஷம். ஒரு நிறுவனம் ஒரு கணக்கெடுப்பில் டாப் 5 பாடல்களை வரிசைப்படுத்தியிருந்தது. அதில் டாப் 4 என் பாடல்கள் 1.சிக்குபுக்கு பூம் பூம் (மாசிலாமணி), 2. டாடிமம்மி (வில்லு), 3. எம்பேரு மீனாகுமார் (கந்தசாமி) 4. மியாவ் மியாவ் பூனை (கந்தசாமி).
இப்போது விவேகா கையில் எழுபதுக்கும் மேற்பட்ட படங்கள் அவற்றில் 15 படங்களுக்கும் மேல் முழுப் பாடல்களும் இவரே எழுதுகிறார்.
விஜய் நடிக்கும் வேட்டைக்காரன், சூர்யா நடிக்கும் சிங்கம், தனுஷ் நடிக்கும் மாப்பிள்ளை மற்றும் குட்டி, ஜீவா நடிக்கும் சிங்கப்புலி, கச்சேரி ஆரம்பம், ரௌத்ரம் போன்ற படங்கள், ஷங்கர் தயாரிக்கும் ஈரம், ஜெயம்ரவி நடிக்கும் தில்லாலங்கடி, நகுல் நடிக்கும் கந்தக்கோட்டை, விஜய்யின் 50வது படம், கரு.பழனியப்பன் இயக்கும் புதிய படம், ஷக்தி நடிக்கும் வஞ்சிக்கோட்டை வாலிபன், ஜீவன் நடிக்கும் நான் அவனில்லை 2ம் பாகம், அஜ்மல் - கிஷோர் நடிக்கும் முட்டம், அர்ஜூன் நடிக்கும் அறுவடை, அகம்புறம், மிளகா, சொல்ல சொல்ல இனிக்கும், நாய்க்குட்டி, புகைப்படம், நந்தா நந்திதா, கவசம், கந்தர்வன், காண்டீபன், ராமன் நல்ல பிள்ளை, பகடை என பட்டியல் நீஈஈஈள்கிறது.
இப்போது விவேகா நாளொரு மெட்டும் பொழுதொரு பாட்டும் என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.
எனக்குத் தொழில் கவிதை என்பதில் உறுதியாக இருக்கும் விவேகா தன் கனவும் கவனமும் எப்போதுமே திரைப்பாடல்கள் எழுதுவதையே மையம் கொண்டிருக்கும் என்கிறார்.
எனக்குக் கமர்ஷியல் எழுத்தும் வரும் கவித்துவ எழுத்தும் வரும். அதற்கான பயிற்சியும் அனுபவமும் எனக்கு இருக்கிறது. காலம் அமையும்போது அதை நிரூபிப்பேன் என்கிற விவேகாவின் வருங்காலம் வசந்தகாலமாகி வருகிறது. அவரது கனவு மெய்ப்பட நாமும் வாழ்த்தலாம்.

   
 

Copyright © 2005 tamilscreen.com  All rights reserved.
Best view under 800 X 600 Resolution with Netscape 4.x or IE 4.x and above version.

Netscape 6 not recommended