|
எல்லாம் அவன் செயல், அழகர் மலை வெற்றிப் படங்களின் நாயகன் ஆர்கே... சினிமா
மட்டுமல்லாமல், தனது பன்முகப் பரிமாணத்தைக் காட்டும் வகையில், மிகச் சமீபத்தில்தான்
வாங்க சாப்பிடலாம் என்ற உணவகத்தைத் திறந்தது நினைவிருக்கும்.
இந்த சைவ அசைவ உணவகத்துடன் இணைந்து விஐபி அக்ஸஸ் கிளப் மற்றும் உடற்பயிற்சிக்
கூடத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ஆர்கே.
ஆர்கேயின் விஐபி அக்ஸஸ் கிளப்பில் சர்வதேசத் தரம் வாய்ந்த ஸ்னூக்கர் அரங்கும்
அமைந்துள்ளது. இந்த அரங்கில் தற்போது விஐபி மேட்ரிக்ஸ் ஆல் இந்தியா இன்விடேஷன்
ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகள் (VIP Matrix All India Invitation Snooker
Championship 2009) நடக்கவிருக்கின்றன.
போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத் தொகை வீரர்களின் ஆர்வத்தை இரட்டிப்பாக்கும்
வகையில் உள்ளது.
இந்தப் போட்டியில் வெல்லும் வீரருக்கு முதல்பரிசாக ரூ 1,50,000 வழங்கப்படுகிறது.
இரண்டாவதாக வரும் வீரருக்கு ரூ 90000-ம், அரையிறுதி வரை வரும் வீரருக்கு ரூ
50000-மும், காலிறுதிப் போட்டி வரை வரும் வீரர்களுக்கு ரூ 25000-மும் பரிசாக
வழங்கப்படும்.
இந்தப் போட்டியில் ஒரே விஸிட்டில் யார் அதிக புள்ளிகளை எடுக்கிறாரோ (குறைந்தபட்சம்
100-க்குமேல்) அவருக்கு ரூ 25000-மும் வழங்கப்படுகிறது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றுவரை விளையாடும் வீரர்களுக்கு ரூ 10000 வழங்கப்படும்.
வரும் டிசம்பர் 18-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை 1 வாரம் நடக்கும் இந்த போட்டியில்
சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஸ்னூக்கர் விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
பில்லியர்ட்ஸில் எட்டுமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற Padmashri கீத் சேத்தி, 7
முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரும், தேசிய அளவில் இன்றைய ஸ்னூக்கர் சாம்பியனுமான
Padmashri பங்கத் அத்வானி, ஆசிய சாம்பியன் பட்டம் வென்ற ரஃபட் ஹபீப், நடப்பு மாநில
சாம்பியன் எஸ்ஏ சலீம் உள்ளிட்ட 18 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இவர்கள் அனைவரும் நேரடியாக போட்டிகளில் விளையாடுகின்றனர். இவர்களைத் தவிர தகுதிச்
சுற்றுக்களில் தேர்ச்சி பெற்ற 6 வீரர்களும் இந்த சாம்பியன்களுடன் இணைந்து விளையாட
உள்ளனர்.
இந்தப் போட்டிகள் அனைத்தும் தி நகர், கோபாலகிருஷ்ணா தெருவில் அமைந்துள்ள ஆர்கேவின்
விஐபி அக்ஸஸ் கிளப்பில் நடைபெறுகிறது.
இந்த போட்டியின் சேர்மனாக இருப்பவர் நடிகர் - தொழிலதி்பர் ஆர்கே என்பதுதான் இந்தச்
செய்தியின் முக்கிய அம்சம்.
பி வாசு இயக்கத்தில் புதிய படம்
இன்னொரு பக்கம் தனது புதுப்பட வேலைகளிலும் மும்முரமாக உள்ளார் ஆர்கே. அடுத்து இவர்
நடிக்கும் படத்தை இயக்குபவர் நட்சத்திர இயக்குநர் பி வாசு என்பது ஏற்கெனவே
தெரிந்திருக்கும்.
தற்போது இந்தப் படத்துக்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்தப் படத்தில்
ஆர்கே ஜோடியாக நடிக்க பிரபல மலையாள நடிகை ஒப்பந்தம் செய்யப்பட உள்ளார். விரைவில்
அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும். டிசம்பர் 2-வது வாரத்திலிருந்து படப்பிடிப்பு
தொடங்குகிறது. |