|
சரண் உதவியாளர் வெங்கட் இயக்கத்தில்,
பாப்பிலோன் கம்பூனிகேஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம் - கதிர்வேல்
அஞ்சாதே படத்தின் மூலம் அலட்டல் இல்லாமல் அசத்தல் நடிப்பை வழங்கி அஜ்மல்
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் பார்த்தவர்கள் மனதில் விழுந்த சுனேனா
என இந்த இரு வெற்றி முகங்களும் இணையும் படம் கதிர்வேல்.
இயக்குனர் படம் பற்றிக் கூறும்போது, இது புதுமையான கதை என்றோ பிரம்மாண்ட படம்
என்றோ எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யாமல்,
மனிதன் பிறக்கும் போதிலிருந்தே கதை கேட்டு வருகிறான். ஒவ்வொரு கதையும்
ஒவ்வொரு ரகம். சில நேரம் ஒரே கதை வெவ்வேறு நபர்களால் சொல்லப்படும்போதும்
புதிதாகத் தோன்றுவதுண்டு, ரசிக்கப்படுவதுண்டு. அப்படித்தான் இப்படமும்
இருக்கும் என்று அடக்கமாக வெளிப்படுத்துகிறார் வெங்கட்.
சென்னை ஒரு விசித்திரமான நகரம். இங்கு லட்சக் கணக்கான மக்கள் வசிக்கிறார்கள்.
அதே சமயம் தினமும் லட்சக்கணக்கானவர்கள் வெளியிலிருந்து வருகிறார்கள்,
இங்கிருந்தும் வெளியேறுகிறார்கள்.
மின்சார ரயிலில் பயணம் செய்கிறோம். பலதரப்பட்டவர்களை பார்க்கிறோம். அருகில்
மோவாயில் கைவைத்தபடி ஜன்னலைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கும் சகபயணி யார்
என்று நாம் அறிவதில்லை. அவன் எங்கு போகிறான். என்ன செய்யப் போகிறான் என்பது
தெரியாது. அவன் கோயிலுக்குப் போகிறானா குண்டு வைக்கப் போகிறானா என்பது
தெரியாது. ஏன் அவன் நம் வாழ்க்கையில் கூட குறுக்கே வரக் கூடும்.
கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் நம் நாயகன் கதிரேசன் ப்ளஸ்டூ படித்த இளைஞன்.
வேலை தேடி வருகிறவன். சந்திக்கும் சுவாரஸ்யங்கள் பல. காதலியைச் சந்திக்கிறான்
அவனது இலையுதிர் காலம் வசந்த காலமாகிறது.
கலகலவென்று போய்க் கொண்டிருக்கிற அவன் வாழ்வில் சோதனைச் சூறாவளி. அவன்
எடுக்கும் ஒரு தவறான முடிவின் தாக்கம் அவனைத் தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது.
அதை எப்படி எதிர் கொள்கிறான். எப்படி மீள்கிறான் என்பதே கதை. சூழ்நிலை எப்படி
அவனது வாழ்நிலையை மாற்றுகிறது என்பது சுவாரஸ்ய திரைக்கதை.
தப்பிதமாக ஒரு தவறு செய்தவனை இந்தச்சமூகம் எப்படி திருந்திவிடாமல் வருந்த
வைக்கிறது என்பதை கதிரேசன் பாத்திரம் கூறும். கலங்க வைக்கும்.
நடைமுறை வாழ்க்கையில் உறவுகளிடையே அன்பு பரிமாற்றம் செய்து கொள்வது பூக்கள்
போல வெளியே தெரிவதில்லை. வேருக்குள் நீர் உறிஞ்சப்படுவது போல அது மறைமுகமாக
ஒளிந்திருக்கும் உயிரோட்டம். இது மகன் கதிரேசன் அப்பா வேலுச்சாமி மூலமும்
வெளிப்படுகிறது. இந்த வெளிப்பாடு உருக வைக்கும்.
மகன் அஜ்மல், அப்பா பொன்வண்ணன், சாலையில் எத்தனையோ பெண்கள் போகிறார்கள்.
ஆனால் ஸ்கூட்டியில் நம்மைக் கடந்து போக்கு எதோ ஒரு பெண்ணின் முகத்தை மட்டுமே
திரும்பிப் பார்க்கத் தோன்றும். அப்படி ஒரு பக்கத்து வீட்டுப் பெண்ணாக
வருகிறார் சுனேனா, ஆச்சாரம் மாறாத ஐயங்கார் வீட்டுப் பெண் துறுதுறு குணம்,
இளமைத் துள்ளல் கொண்டவராக.
அஜ்மல் - சுனேனா இவர்களிடம் நிகழும் இயல்பியல் ரசாயன மாற்றங்கள்
எப்படியிருக்கும் என்கிற வரலாறு படத்தில் உண்டு. இப்படத்தைப் பொறுத்தவரை நாயகன்
யார் என்றால் படம் பார்க்க வரும் ரசிகன் தான் என்கிறார் இயக்குநர்.
நாம் படமெடுப்பது அவர்களுக்குத்தான், அவர்கள் காசு கொடுத்து செலவழிக்கும்
மூன்று மணி நேரத்தை நாம் போரடிக்காமல் திருப்திப்படுத்தினோமா என்பதே முக்கியம்.
பார்த்துவிட்டு அவர்கள் வாய்மொழியில் வெளிவரும் நல்லாருக்கு வார்த்தைக்காக
இவ்வளவு பாடுபடுகிறோம் என்கிறார். நாயகனும் வில்லனும் உச்சக்கட்டக்
காட்சியில்தான் சந்திக்கிறார்கள். இது படத்திலுள்ள புதுமைகளுக்கு ஒரு சாம்பிள்.
அஜ்மல், சுனேனா, வி.எம்.சி.ஹனிபா, கஞ்சா கருப்பு, பொன்வண்ணன், சண்முகராஜன்,
காதல் தண்டபாணி, மயில்சாமி, சிங்கமுத்து, தவிர ஜான்விஜய், வினோதிரி,
ஜி.எம்.குமார், ஹாரிஸ் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் 6
திருடர்களும் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - வெங்கட், ஒளிப்பதிவு - ஆர்.ரமேஷ்பாபு, இசை-
சாஜன் மாதவ், பாடல்கள் - ப்ரியன், கலை - ராஜீவன், ஸ்டண்ட் - தியாகராஜன்,
எடிட்டிங் - சரவணன், இணை தயாரிப்பு - ஆர்.மோனிதா, தயாரிப்பு -
வி.செந்தில்குமார், கதிர்வேல் படப்பிடிப்பு தொடங்கி மும்முரமாக நடைபெற்று
வருகிறது.
|