|
உயிர், மிருகம் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர்
சாமி தற்போது இயக்கும் படம் சரித்திரம். ராஜ்கிரண், மிருகம் படத்தில் நடித்த
ஆதி இணைந்து நடிக்கும் சாமி படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு
முடிந்துவிட்டநிலையில், பொள்ளாச்சி இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கு செல்ல
தயாராகிக் கொண்டிருந்தார் இயக்குநர் சாமி. சரித்திரம் படம் பற்றி அவருடன்
உரையாடினோம்..
சரித்திரம் என்றால் என்ன?
'அழிந்து வரும் தமிழனின் தற்காப்பு கலையான சிலம்பம் விளையாட்டின் சரித்திரத்தைப்
பற்றி சொல்லும் கதை இது. படிக்காத பாமரனிடம் மட்டுமே உள்ள இந்த வித்தையை
படித்த கணிப்பொறியாளர்களிடமும் எடுத்துச் செல்லும் முயற்சி இது. அழிந்து வரும்
இந்த தமிழனின் கலையை மேலை நாட்டினருக்கும் கொண்டு செல்லும் ஒரு செல்லுலாய்டு
பதிவு இது. இனி வரும் தலைமுறையினருக்கு சிலம்பம் பற்றிய சிறு குறிப்பு
தேவைப்பட்டாலும் இந்த சரித்திரம் திரைப்படமே சிறந்த ஒரு ஆவணமாய் இருக்கும்.'
உங்களுக்கு சிலம்பம் விளையாட்டு தெரியுமா?
'சிறுவயதில் எனது அப்பா சிலம்ப வாத்தியார்களுடன் சண்டையிட்டதை முள் வேலி வழியே
மட்டும் பார்த்த அனுபவம் மட்டும்தான். என் மனதில் இருந்த இந்தக்கலை தற்போதைய
காலகட்டத்தில் அறவே இல்லாமல் போய்விட்டது மனிதனின் உடலையும் மனதையும்
ஒழுங்குபடுத்தும் இச்சிலம்ப விளையாட்டு கண்முன்னே அழிந்து வருவதை மீட்டெடுக்கும்
ஒரு முயற்சியாகத்தான் இந்த சரித்திரம் படத்தை எடுக்க முனைந்தேன்.'
சரித்திரம் படத்துக்காக நீங்கள் நிறைய ஹோம்வொர்க் பண்ணியதாக கேள்விப்பட்டோமே?
'ஆமாம். சிலம்பம் பற்றி படமெடுக்க முடிவு செய்த பிறகு இக்கலையை பற்றி முழுவதும்
தெரிந்து கொள்ள, தமிழகத்தின் தென்மாட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி,
கன்னியாகுமரி, நாகர்கோவில், ராஜபாளையம், விருதுநகர், தென்காசி போன்ற
மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள அனுபவம் வாய்ந்த சிலம்ப ஆசான்களையும் அவர்களின்
சிஷ்யர்களையும் பார்த்து அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்து வீடியோவில் பதிவு
செய்து, இக்கலையை ஒரு படமாக பார்க்காமல், பாடமாவே பாவித்து அதன்
நுணுக்கங்களையும் தொழில் ஈடுபாட்டையும் மிகச் சரியாக இப்படத்தில்
இணைத்துள்ளோம்.'
சிலம்ப விளையாட்டைப்பற்றிய பதிவாக மட்டுமே இப்படம் இருக்குமா?
'இல்லை. சிலம்ப வீரர்களின் காதலும், வீரமும் செறிந்த வாழ்க்கையையும் ஆட்டம்,
பாட்டம், கூத்து, கொண்டாட்டத்துடன் முழு நீள பொழுது போக்கு படமாய்
எடுத்திருக்கிறேன். இந்த சரித்திரத்தில் மூன்று ஆசான்களின் வாழ்க்கையை
சொல்லியிருக்கிறேன்.'
நீங்கள் தேர்வு செய்த நட்சத்திரங்கள் கதைக்கு பொருத்தமாக இருப்பதாக
நினைக்கிறீர்களா?
'அதில் எனக்கு பரம திருப்தி. தமிழனின் பரம்பரை விளையாட்டு பற்றிய படமாக இது
இருப்பதால் கிராமத்து முகம், கதையை விட்டு விலக முடியாத முகமாக வேண்டும் என்று
நினைத்த மத்திரத்தில் வந்த முகம் நம் ராஜ்கிரண் சார். அவரிடம் இக்கதையை நான்
சொல்லி முடித்தவுடன் இது மாதிரியான ஒரு படமே எனது வாழ்வின் பொக்கிஷம் என்று
ஆரத்தழுவி, இச்சிலம்ப கலையை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள ஒரு சிலம்ப
ஆசானையும் வரவழைத்து பயிற்சி பெற்ற ராஜ்கிரண், இந்தப்படத்தில் அழகர்சாமி ஆசானாக
வாழ்ந்துள்ளார்
பேயத்தேவன் கதாபாத்திரத்திற்கு இவரை விட்டால் வேறு ஆளில்லை என்று முடிவெடுத்த
பிறகு கலாபவன்மணியிடம் கதையை சொன்ன உடன்,ஒரு இனத்தின் கலாச்சாரம், பாரம்பரியம்
அழிய கூடாது என்பதை மிக ஆணித்தரமாக கூறியுள்ளீர். இனி நான் பேயத்தேவனாக
வாழ்கிறேன் என்று கூறி, எங்களை திக்குமுக்காட வைத்துவிட்டார். எங்கள் அதிர்ஷ்டம்
அவர் கேரளத்தின் வடக்கன் களரியை சிறு வயதிலேயே கற்று தேர்ந்தவராக இருக்கிறார்.
குருவுக்காக கட்டை விரலை இழந்த ஏகலைவனின் தற்கால வடிவம்தான் ஆதியின் பாத்திரம்.
தற்காலத்து மாடர்ன் பையனாகவும் அஜானுபாகுவான உடற்கட்டும் தேவைப்பட்டதால்
இக்கதைக்கு மிகவும் பொருந்தி போயிருக்கிறார். சிலம்பம் பற்றி அறவே தெரியாத
அவருக்கு களரி செல்வராஜ் என்ற சிலம்ப ஆசானை வரவழைத்து மூன்று மாதங்களுக்கு மேல்
பயிற்சி அளித்து அதில் தேர்ந்தவராகிய பிறகே படப்பிடிப்பை ஆரம்பித்தோம்.
இப்படத்தில் இவர்களை மட்டும் அல்லாது இடம் பெறும் அணைத்து சிலம்ப வீரர்களும்
உண்மையான சிலம்பம் தெரிந்த சிலம்ப வீரர்களையே நடிக்க வைத்துள்ளோம்.'
என்ற சாமி சரித்திரம் படத்தில் இணைந்த தொழில்நுட்பக்கலைஞர்கள் பற்றியும்
சொல்கிறார்..
'தமிழனின் வலியை, பெருமையை, ஆனந்தத்தை, வீரத்தை வாழ்க்கையை பற்றி இப்படம்
கூறுவதால் அதனை நன்கு புரிந்து இசை அமைப்பாளர்கள் சபேஷ்முரளியின் இசை தமிழ்
ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும்.
உழவன் மகன் படத்தில் ரேக்ளா ரேசை மிக பிரமாண்டமாக படம் பிடித்து ஒளிப்பதிவு
இயக்குநர் ரமேஷ்குமார், சிலம்ப வீரர்களின் வாழ்க்கையை அவர்கள் வீட்டினுள்ளே
இருந்து படம் பிடித்தது போல் யதார்த்தம் மீறாமல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
தமிழர்களின் யதார்த்த வாழ்க்கையை பதிவு செய்த காதல், வெயில் போன்ற படங்களில்
பணிபுரிந்த கலை இயக்குநர் சிலம்ப விளையாட்டின் சிலம்பக் கலைக்கூடம் ஒன்றை மிகப்
பிரமாண்டமாய் அமைத்திருக்கிறார். சிலம்ப வீரர்களின் ஆயுதங்கள் உடற்பயிற்சி
பொருட்கள், மருத்துவப் பொருட்கள், கோவில் குளம் என்று கதை நடக்கும் 1960
வருடத்திற்கான அடையாளத்தையும், 1980 வருடத்திற்கான அழகியலையும் பின்புலமாய்
அமைத்து அசத்தியுள்ளார். அவருக்கு இப்படத்தின் மூலம் தேசிய விருது நிச்சம்
கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
சண்டை இல்லாத ஒரு சண்டைப்படமாய் இப்படத்தின் சண்டை காட்சிகளை ராம்போ ராஜ்குமார்
அமைத்துள்ளார். காரணம் படத்தின் 12 சண்டை காட்சிகளும் 12 சிலம்பப் போட்டியாகும்,
36வது சேம்பர் ஆஃப் சாவ்லின், ஹீரோ, பிரேவ் ஹார்ட், கிளேடியேட்டர் போன்ற
ஹாலிவுட் படங்களுக்கு இணையாக சண்டை காட்சிகள் இருக்கும்.
|