தமிழ்ப்பட நட்சத்திரங்களில் படத்துக்குப் படம் புதிய முயற்சிகள், வித்தியாசமான
கெட்டப்புகள் என அசத்துவது கமல்ஹாசன்தான். இந்தத் தலைமுறை நடிகர்களிலும் அப்படி
ஒருவர் என்றால்.. அது சூர்யாதான். நந்தாவில் தொடங்கி வாரணம் ஆயிரம் வரை
படத்துக்குப் படம் நடிப்பில் மட்டுமின்றி, தோற்ற வித்தியாசங்களிலும் பிரமிக்க
வைக்கிறார். அதிலும் அண்மையில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின்
நடிப்பும், கதாபாத்திரத்துக்காக தன்னை மாற்றிக் கொண்ட அர்ப்பணிப்பும்
அசாதாரணமானது.
வாரணம் ஆயிரம் படத்தின் தரம் பற்றியும், அதன் வெற்றி தோல்வி பற்றியும்
மாறுபட்ட கருத்துக்கள் நிலவினாலும், அந்தப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பற்றியோ,
உழைப்பு பற்றியோ ஒரே கருத்துதான்! அட்டகாசம், அற்புதம், அருமை, ஆஹா ஓகோ என்பதே
பட பார்த்தவர்களின் கருத்து!
அண்மையில் சூர்யாவை சந்தித்தபோது வாரணம் ஆயிரம் படத்திற்காக அவர் எடுத்துக்
கொண்ட சிரத்தைகள், சிரமங்கள் பற்றித்தான் முதலில் கேட்டோம்...
''வாரணம் ஆயிரம் படத்தில் கௌதம் மேனனின் சொந்த வாழ்க்கையில் நடந்த சில
சுவாரஸ்ய சம்பவங்களை எடுத்துக் கொண்டிருந்தாலும், முழுக்க அவரது லைஃப் ஸ்டோரி
அல்ல. பதினெட்டு வயது இளைஞன் மிலிட்டரியில் சேர்கிறான் என்பது மட்டும்தான். நமது
அனைவரின் வாழ்க்கையிலும் இது போன்ற பல சம்பவங்கள் நடப்பதுண்டு. ஆனால் எதுவுமே
சினிமாவுக்காக மிகைப்படுத்தப்பட்டவை அல்ல. அறுபத்தி நாலு வயது அப்பா
வேடத்திலிருந்து பதினெட்டு வயது மகன் கேரக்டருக்கு மாறி மாறி நடிப்பது அவ்வளவு
எளிதானதாக இல்லை. நம்ம நடிகர் திலகம் இது மாதிரி எவ்வளவே படங்களில் எத்தனையோ
கேரக்டர்கள் செய்து அசத்தியிருக்கிறார். சிவாஜி என்கிற அந்த டிக்ஷ்னரியை
புரட்டிப் பார்த்தால் நிறைய விஷயங்களை சமாளிக்கலாம். மிலிட்டரி யூனிஃபார்மை
போட்டவுடன் அந்த கம்பீரமும், மிடுக்கும் சேர்ந்து அந்த கேரக்டராகவே அவர்
மாறிவிடுவார். அந்த அதிசயம் நான் யூனிஃபார்ம் போடும்போதும் என்னை அறியாமலேயே
நடந்ததுதான் ஆச்சரியமான விஷயம்.''
வாரணம் ஆயிரம் படத்தில் நீங்கள் ஏற்ற தந்தை வேடத்துக்கு உங்கள் அப்பா
சிவகுமார்தான் முன்மாதிரி என்று சொல்லலாமா?
''அப்படி சொல்ல முடியாது. எங்க அப்பாவின் கேரக்டருக்கு முற்றிலும் மாறுபட்டது
நான் நடித்த கிருஷ்ணன் கேரக்டர்! எங்க அப்பா சுறுசுறுப்பான, படு கண்டிப்பான, ஒரு
முழுமையான மனிதர். ஆனால் வாரணம்.. ஆயிரம் அப்பா கேரக்டரோ படு கூலான, ஜாலியான
ஆசாமி.''
அயன்' படத்தில் கல்லூரி மாணவன் வேடமா? இவ்வளவு இளமையாக இருக்கிறீர்களே?
"அயன் படத்தில் எனக்கு கல்லூரி மாணவன் கேரக்டர் இல்லை. வாரணம் ஆயிரம்'' படத்தில்
18 வயது இளைஞனாக நடித்தபோது குறைத் உடம்பை, அந்த யூத் ஃபிட்னஸை அப்படியே
மெயின்டெயின் பண்ணி வருகிறேன். அதே சமயம் அயன் படத்தில் நான் ஏற்றிருகும்
கேரக்டருக்கும் பொருத்தமான தோற்றம்தான். நார்த் மெட்ராஸ் பின்னணியில் நடக்கும்
கதை இது. பர்மா பஜாரில் வெளிநாட்டு சரக்குகள் வாங்கி விற்பவராக நடிக்கிறேன்.
இந்தப்படத்திலும் என் கேரக்டரும் நடிப்பும் பேசப்படும்.''
சினிமா நட்சத்திரம் என்றால் தவிர்க்க முடியாதது கிசு கிசுக்கள், வதந்திகள்!
ஆனால் இவற்றிலிருந்து உங்களால் எப்படி தப்பிக்க முடிகிறது?
''அதற்கு அடிப்படையான காரணம் நாம் நடந்து கொள்ளும் முறையில்தான் இருக்கிறது.
நான், தம்பி கார்த்தி, சகோதரி பிருந்தா ஆகிய மூவருமே சினிமா நட்சத்திரத்தின்
குழந்தைகளாக வளர்க்கப்படவில்லை. ஒழுக்கமான எளிமையான நல்ல குழந்தைகளாக
வளர்க்கப்பட்டோம். அதற்கு முழு காரணம் அப்பாவின் கண்டிப்பும், அம்மாவின்
பாசமும்தான். என் வீடு என்கிற குருகுலத்தில் கற்ற குணங்கள் எங்களுக்கு இது
போன்ற விஷயங்களில் சிக்காமல் அனைவருடனும் ஒன்றிப் பழக பேருதவியாக இருக்கிறது.
இதைத் தவிர வேறு காரணம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.''
உங்கள் அப்பாவைப் போல் நீங்களும் ஒரு நல்ல தந்தையாக இருக்க இது உதவுமா?
இப்போது ஒரு வயதாகும் தியாதான் எங்கள் வீட்டின் சூப்பர் ஸ்டார். எங்கள்
குடும்பத்தில் தியா மிகவும் பாப்புலர். இப்பவே ரொம்ப பெரிய மனுஷி மாதிரி
நடந்துக்கறா. அவள் கண் முன்னால் எந்தவொரு விஷயம் நடந்தாலும், உண்மையிலேயே அது
வேடிக்கையானதுதான்னு அவள் நினைச்சா மட்டுமே சிரிக்கிறாள். அதே மாதிரி
தேவையில்லாமல் அழவும் மாட்டாள். இப்பவே ரொம்பவும் டிஸிப்பிளிளோடு இருக்கிறாள்.
நான் பார்த்தவரைக்கும் இவ்வளவு சமர்த்தாக நடந்து கொள்ளும், அதுவும் ஒரு வயது
குழந்தைப் பருவத்தில், குழந்தை யாரும் இல்லை'' என்று சொல்லும்போது சூர்யாவின்
முகத்தில் தெரிந்த பெருமிதத்தைப் பார்க்கணுமே!
|